மஸ்கெலியாவை சேர்ந்த பெண் சவூதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

மஸ்கெலியாவை சேர்ந்த பெண் சவூதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 11:36 am

சவூதி அரேபியாவின் ரியாத் ஒலாய்யா முகாமில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சவூதிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

ரியாத் ஒலாய்யா பபா முகாமின் ஆறாம் இலக்க எக்‌ஷிட் மிகாமில் தங்கியிருந்த இலங்கை பணிப்பெண்னொருவரே உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் மஸ்கெலியாவை சேர்ந்த 39 வயதான பழனியான்டி கற்பகவள்ளி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தயான குறித்த பெண் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாயப்பு முகவர் நிலையமொன்றினூடாக சவூதிக்கு சென்றுள்ளார்.

கடந்த 31 ஆம் திகதி இந்த பெண் உயிரிழந்ததை அடுத்து அந்த முகாமில் தங்கியிருந்த மற்றுமொருவரால் தகவலை பெற்று களனி பகுதியில் வசிக்கும் ஏ.எஸ்.எம் இஸ்மத் என்பவரால் நியூஸ்பெஸ்ட்டுக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த பெண் உயிரிழந்து 8 நாட்கள் கடந்துள்ள போதிலும் அதிகாரிகளூடாக குடும்பத்தினருக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நபரிடமிருந்து தகவல் அறிந்த பழனியான்டி கற்பகவள்ளியின் சகோதரன், உயிரிழந்துள்ளவர் தனது சகோதரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் சமூக வளைதளங்களினூடாக தமது சகோதரியின் மரணம் தொடர்பில் அறிந்துக் கொண்டதாகவும் பழனியாண்டி பரமசிவம் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

ஒலாய்யா முகாமில் உயிரிழந்த பழனியான்டி கற்பகவள்ளி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக சவூதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாசிம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுமார் 80 இற்கும் மேற்பட்ட இலங்கை பணிப்பெண்கள் ஒலாய்யா முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக செயற்பட்டு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சவூதியில் உயிரிழந்துள்ள பழனியாண்டி கற்பகவள்ளியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நிறைவு பெற்றதன் பின்னர் மரணம் தொடர்பில் அறிவிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தமது சகோதரியின் மரணத்திற்கு சரியான பதில் வழங்க வேண்டும் என சவூதியில் உயிரிழந்துள்ள பழனியாண்டி கற்பகவள்ளியின் சகோதரன், பழனியாண்டி பரமசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்