இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை: ஒருங்கிணைந்த குழு அமைத்து ஆராயத் தீர்மானம்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை: ஒருங்கிணைந்த குழு அமைத்து ஆராயத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 8:13 pm

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஒருங்கிணைந்த குழு அமைத்து ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் தலைமையில், இந்தியத் தலைநகர் புது டில்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பவனில் இன்று காலை ஆரம்பமான கூட்டத்தில் இந்தியா சார்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வேளாண் அமைச்சர் ராதாமோகன்சிங் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

இலங்கை சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர, மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருநாட்டு மீனவர்களிடையே சுமூக உறவை ஏற்படுத்தும் வகையில் இலங்கை, இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையே கடந்த 2 ஆம் திகதி நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் போது ஏற்படும் சிக்கல்கள், மீன்பிடிப் படகுகளை உபயோகிக்கும் முறைகள், கச்சதீவு கடற்பரப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது இரண்டு நாடுகளினதும் மீனவர் பிரதிநிதிகள் கலந்தாலோசித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

இதன்போது, ஒருங்கிணைந்த குழுவொன்றை அமைத்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதற்தடவையாகக் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை இந்தக் குழு கூடி விடயங்களை ஆராயவுள்ளது.

அத்தோடு இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்