அமைச்சர்களான மங்கள சமரவீர, மஹிந்த அமரவீர இந்தியா பயணம்

அமைச்சர்களான மங்கள சமரவீர, மஹிந்த அமரவீர இந்தியா பயணம்

அமைச்சர்களான மங்கள சமரவீர, மஹிந்த அமரவீர இந்தியா பயணம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 1:24 pm

இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்வதற்கு அமைச்சர்களான மங்கள சமரவீரவும், மஹிந்த அமரவீரவும் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (04) நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேஷி கொலன்கே தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெறவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரும் இலங்கை சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

நீண்டகாலமாக இருநாட்டு மீனவர்களிடையே நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடவுள்ளது.

எவ்வாறாயினும், இந்த பேச்சுவார்த்தை இறுதித் தீர்வைக் காண்பதற்கான ஒன்றல்ல என்பதுடன், அதற்கான அடிப்படை விடயங்களை ஆராயும் வகையில் அமையும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்திய – இலங்கை மீனவர்களிடையே இடம்பெறவுள்ள நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட வேண்டும் என்பது தொடர்பில், அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய மீனவர்கள் பாரம்பரிய கடற்பிரதேசத்தில் மீன்பிடித்தல், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மீனவர்களின் படகுகளை விடுவித்தல் மற்றும் எதிர்காலத்தில் பாதுகாப்புடன் மீன்பிடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மீனவர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஏற்கனவே நடத்தப்பட்டிருந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்