யாழ். பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

யாழ். பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

யாழ். பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2016 | 7:11 am

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி, பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் இன்று (01) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தை முடக்கும் வகையில் நேற்று (31) போராட்டம் நடத்தினார்கள்.

இதன் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் கல்வி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் நேற்று முடங்கியிருந்தன.

மாணவர்கள் பல்கலைக்கழக பிரதான வாயிலை மறித்து, பீடாதிபதிகள், பேராசிரியர்கள் உட்பட நிர்வாகத்தினர் எவரையும் உட்பிரவேசிக்க விடாது போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்த நிலைமையின் கீழ், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நேற்று யாழ். பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்ததை நடத்தினார்.

இதன்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை மாணவர் பிரதிநிதிகள் கொழும்பில் இன்று சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்ததை அடுத்து, மாணவர்களின் நிர்வாக முடக்க போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.

இதன் பிரகாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஜனாதிபதியை இன்று பிற்பகல் 12.30 அளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நேற்று சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்