பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: விரைவில் உரிய பதில் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதி

பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: விரைவில் உரிய பதில் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதி

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 10:05 pm

யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் அண்மையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கம் சார்பில் அதன் 18 உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

மாணவன் சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும் எனவும் இதன்போது மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதவான் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என இதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஏனைய கோரிக்கைகள் தொடர்பிலும் விரைவில் உரிய பதில் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்து நாளை அனைத்துத் தரப்பினரையும் தெளிவுபடுத்த எண்ணியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்