முறக்கொட்டாஞ் -சேனையில் முன்னர் இராணுவ முகாம் இருந்த பகுதியில் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிப்பு

முறக்கொட்டாஞ் -சேனையில் முன்னர் இராணுவ முகாம் இருந்த பகுதியில் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 8:27 pm

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இன்று நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மலசலக்கூடத்திற்கான குழி வெட்டப்பட்ட போதே இந்த எச்சங்கள் மீட்கப்பட்டன.

மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய எம்.ஐ.எம். ரிஷ்வி மற்றும் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி சாலக்க பெரேரா ஆகியோர் முன்னிலையில், மீட்கப்பட்ட எலும்பு எச்சங்களும் அவை அகழப்பட்ட இடமும் பரிசோதிக்கப்பட்டன.

மீட்கப்பட்ட எலும்பு எச்சங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் நிர்மானப்பணிகள் இடம்பெறும் குறித்த பகுதியை மேலும் ஆய்வுக்குட்படுத்துவதற்காகப் பாதுகாக்குமாறும் மேலதிக மாவட்ட நீதிபதி எம்.ஐ.எம். ரிஷ்வி உத்தரவிட்டார்.

முறக்கொட்டாஞ்சேனையில் எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் முன்னர் இராணுவ முகாம் இருந்ததாகவும், பின்னர் அந்த காணிகள் மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்