மீரியபெத்த மக்களுக்கு வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் வடிகாண் கட்டமைப்பில் குறைபாடுகள்

மீரியபெத்த மக்களுக்கு வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் வடிகாண் கட்டமைப்பில் குறைபாடுகள்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 10:21 pm

மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் உரிய வடிகாண் கட்டமைப்பு இன்மையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு வருடங்களின் பின்னர் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வீடுகளில் குடியமர்ந்தாலும் தாம் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவித்தனர்.

மீரியபெத்தயில் இடம்பெற்ற மண்சரிவினால் தமது உறவுகளையும் உடைமைகளையும் இழந்து, 2 வருடங்கள் மாகந்த தேயிலைத் தொழிற்சாலையில் தங்கியிருந்த மக்களுக்கு கடந்த 22 ஆம் திகதி வீடுகள் வழங்கப்பட்டன.

75 வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்ட போதிலும், கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கன மழையால் தாம் அதிக சிக்கல்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவித்தனர்.

உரிய வடிகாண் கட்டமைப்பு இன்மையினால் சில பகுதிகள் தாழ் இறங்கியுள்ளதோடு அநேகமான பகுதிகள் சேறும் சகதியுமாகக் காணப்படுகின்றன.

இந்த நிலையில், மக்கள் தமது சொந்த செலவில் மதில்களை அமைத்து வருகின்றனர்.

மீரியபெத்த மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் ஹல்தமுல்ல பிரதேச செயலாளர் ஷிரோமி ஜீவமாலாவிடம் வினவியபோது, இதுபற்றித் தாம் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டார்.

எனினும், உடனடியாகக் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் அறிக்கையொன்றைக் கோரவுள்ளதாக ஹல்தமுல்லை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்