கமல் ஹாசனைப் பிரிவதாக கௌதமி அறிவிப்பு

கமல் ஹாசனைப் பிரிவதாக கௌதமி அறிவிப்பு

கமல் ஹாசனைப் பிரிவதாக கௌதமி அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 3:45 pm

கடந்த 13 ஆண்டுகளாக நடிகர் கமல் ஹாசனுடன் வாழ்ந்து வந்த நடிகை கௌதமி, அந்த உறவில் இருந்து விலகுவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 13 ஆண்டுகளாக மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும் தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது என்றும் மகளின் எதிர்கால நலனுக்காக பிரிவு அவசியம் எனக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதால் இதற்கு மேல் இணைந்து வாழ்வதில் அர்த்தம் இருக்காது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த மனநிலையில் தான் இருந்து வந்தேன். என் வாழ்க்கையில் எடுத்த மிகக் கடுமையான முடிவு இது. என்றும் மாற்றம் ஒன்றே மாறாதது, மனித வாழ்க்கையிலும் இந்த மாற்றம் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை எனது வாழ்க்கையின் மூலம் நான் புரிந்துகொண்டேன். எந்தப் பெண்ணும் எடுக்க முன்வராத மிகவும் சிரமமான முடிவாகவும், எனக்கு தேவையான முடிவாகவும் இது தெரிகிறது.

சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே கமல்ஹாசனின் ரசிகையாக இருந்து, அதன் பின்னரும் அவரது திறமை மற்றும் சாதனைகளை நான் தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளேன். சவாலான நேரங்களில் எல்லாம் அவருக்கு பக்கதுணையாக இருந்ததை எனது மதிப்பிற்குரிய தருணங்களாகக் கருதுகிறேன்.

அவருடையை திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது நிறைய கற்றுக்கொண்டு, அந்தப் படங்களில் அவரது படைப்பாற்றல் சார்ந்த பார்வைக்கு பலம் சேர்த்ததை எண்ணி பெருமை கொள்கிறேன்.

இதுவரை அவர் புரிந்துள்ள சாதனைகளை எல்லாம் கடந்து, அவரது ரசிகர்களுக்காக அவர் மேலும் பல சாதனைகளைப் புரியவுள்ளார் என்பதை அறிந்துள்ளதால், அவரது அந்த வெற்றிகளுக்காகவும் வாழ்த்துத் தெரிவிக்க நான் காத்திருக்கிறேன்.

கடந்த 29 ஆண்டுகளாக உங்களிடமிருந்து ஏராளமான அன்பையும், ஆதரவையும் நான் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையின் இருள்சூழ்ந்த, வலியான காலங்களில் என்னை வழிநடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்,”

என்று குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்