யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: விசாரணை அறிக்கை விரைவில் பொலிஸ் ஆணைக்குழுவிடம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: விசாரணை அறிக்கை விரைவில் பொலிஸ் ஆணைக்குழுவிடம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: விசாரணை அறிக்கை விரைவில் பொலிஸ் ஆணைக்குழுவிடம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2016 | 4:23 pm

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அறிக்கை, எதிர்வரும் வியாழக்கிழமை (03) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள விசேட விசாரணைக் குழு அதிகாரிகளினால் இந்த அறிக்கை தயார் செய்யப்படுவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு தரவுகள், குறித்த குழுவினரால் சேகரிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளூடாக கடந்த திங்கட்கிழமை இந்த விசேட குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிவிக்கப்படும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து – சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப்பகுதியில் கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை விபத்து என பொலிஸார் அறிவித்த போதிலும் பிரேத பரிசோதனையூடாக, உயிரிழந்த ஒருவரின் சடலத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ். கந்தரோடை பகுதியை சேர்ந்த யாழ். பல்கலையில் அரசறிவியல் துறையில் கல்வி பயின்ற மாணவன் நடராசா கஜன் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்ஷ்னுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்