அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 17 ஆவது சிரார்த்த தினம்

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 17 ஆவது சிரார்த்த தினம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2016 | 7:53 pm

மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 17 சிரார்த்த தினம் இன்று நினைவு கூறப்பட்டது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 17 வது சிரார்த்த தின நிகழ்வுகள், தற்போது ஜனாதிபதி செயலகமாக பயன்படுத்தப்படுகின்ற பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, இதன்போது அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்திலும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, ஹட்டன் – கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் பயிற்சி நிலையத்தில் அமரர் சௌமியமூர்த்தி
தொண்டமானின் 17 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி இந்தியாவின், மூனாபுத்தூரில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பிறந்தார்.

தனது 11 ஆவது வயதில் இலங்கை வந்த தொண்டமான், ஆரம்பக் கல்வி மற்றும் உயர் கல்வியை கம்பளை சென் அன்ரூஸ் கல்லூரியில் பயின்றார்.

இலங்கை வாழ் இந்தியர்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடிய அமரர் தொண்டமான், 1936 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தார்.

தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த அன்னார், மலையகத்தின் மன்னராகவும், மாமனிதராகவும் இன்றும் போற்றப்படுகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்