முறிகள் விநியோக மோசடிக்கு அர்ஜூன் மகேந்திரனே பொறுப்புக்கூற வேண்டும்: கோப் அறிக்கை

முறிகள் விநியோக மோசடிக்கு அர்ஜூன் மகேந்திரனே பொறுப்புக்கூற வேண்டும்: கோப் அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2016 | 7:36 pm

மத்திய வங்கி முறிகள் விநியோக மோசடி தொடர்பில் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் பொறுப்புக்கூற வேண்டும் என கோப் குழுவின் அறிக்கையில் இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட மத்திய வங்கியின் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு நன்மை ஏற்படும் வகையில் செயற்பட்ட மத்திய வங்கியின் நம்பகத்தன்மை தொடர்பில் கரிசனை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்
அது தொடர்பில் சட்ட அதிகாரம் உள்ள நிறுவனம் ஒன்றினூடாக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்திற்குள் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியுள்ளமை தொடர்பில் பூரண அதிகாரம் கொண்ட நிறுவனம் ஒன்று உடனடி விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பதை துரிதமாகக் கண்டறிவது மத்திய வங்கியின் பொறுப்பு என நினைவூட்டிய கோப் குழு, தமது பரிந்துரைகளை மத்திய வங்கி நடைமுறைப்படுத்துதல் மற்றும் மீண்டும் இவ்வாறான நிலை ஏற்படாதிருப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றம் நேரடி தலையீடு செய்ய வேண்டும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை அறவிடும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு உள்ளதாக கோப் குழு குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் இவ்வாறான ஒரு நிலை இடம்பெறாதிருக்கும் நோக்கில் மத்திய
வங்கி மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு தகுந்த பொறிமுறை ஒன்றை
நடைமுறைப்படுத்துவதற்கு அந்த நிறுவனம் உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்