யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி வட,கிழக்கில் கவனீயீர்ப்புப் போராட்டங்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி வட,கிழக்கில் கவனீயீர்ப்புப் போராட்டங்கள்

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2016 | 1:15 pm

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (24) கவனீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ். காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நடராசா கஜன் மற்றும் பவுண்ராஜ் சுலக்ஷ்ன் ஆகிய யாழ். பல்கலைக்கழகத்தின் 2 மாணவர்களும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் மரணத்திற்கு நீதியை வழங்குமாறு கோரி யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்று முற்பகல் போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று காலை 7.45 தொடக்கம் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டிருந்ததால் அதன் செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இதேவேளை வட மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்திலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டங்கள் காரணமாக ஏ9 வீதியூடான வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டிருந்தவர்கள் கலைந்து சென்றதால் தற்போது வாகன போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்திற்கு நீதி கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூளை வளாக விபுலானந்தா அழகியல் கல்லூரி மாணவர்களும் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பிற்கு நீதி கோரி முள்ளியவளை வித்தியானந்தா கல்லுரிக்கு முன்பாக வீதி அருகில் நின்று மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாக மாணவர்களும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்