யாழ். மாணவர்கள் உயிரிழப்பு: பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

யாழ். மாணவர்கள் உயிரிழப்பு: பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2016 | 6:57 pm

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விசாரணைகளை நிறைவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த கவலையடைந்ததாக ஜனாதிபதி கூறியதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களுக்கு நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவர் ஒருவரின் சடலத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 4 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து – சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், கொக்குவில் – குளப்பிட்டிச் சந்திப்பகுதியில் இந்த மாணவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தில் பயின்ற கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் மற்றும் கந்தரோடை பகுதியைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஷனுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

மாணவன் நடராசா கஜனின் பூதவுடல் கிளிநொச்சி – பாரதிபுரத்திலுள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பவுண்ராஜ் சுலக்ஷனின் பூதவுடல் யாழ் – கந்தரோடையிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்