யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழப்பு: இந்து மாமன்றம், ஆசிரியர் சங்கம் கண்டனம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழப்பு: இந்து மாமன்றம், ஆசிரியர் சங்கம் கண்டனம்

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2016 | 7:16 pm

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணையை உடன் மேற்கொண்டு, சூத்திரதாரிகளை நீதியின் முன் நிறுத்தி, தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் இடம்பெறாமல் இருப்பதனை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழ‍க மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பாக, பொலிஸாரால் எவ்விதமான முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து எனும் அடிப்படையில் சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ விசாரணையிலேயே சூட்டுக்காயங்கள் இனங்காணப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரை எந்த ஒரு சலனமும் இன்றி பறித்த பொலிஸாருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்