HSBC வங்கி சர்வதேச வணிகக் கடன் வழங்கும் போது இலங்கையின் நாணயக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியுள்ளது

HSBC வங்கி சர்வதேச வணிகக் கடன் வழங்கும் போது இலங்கையின் நாணயக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியுள்ளது

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2016 | 8:38 pm

இலங்கையின் HSBC வங்கி சர்வதேச வணிகக் கடன் வழங்கும் போது, இலங்கையின் நாணய கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை அரசாங்கம், 2013 ஆம் ஆண்டிலிருந்து உள்ளூர் நிறுவனங்களுக்கு 30 மில்லியன் டொலர் வரை சர்வதேச வணிகக் கடனை பெறுவதற்கு, அனுமதி வழங்கியது.

இந்த நடைமுறைக்குள் மறைந்து, HSBC வங்கி தமது மாலைத்தீவுகள் கிளையூடாக இலங்கை நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் நடைமுறைக் கணக்குகளை ஆரம்பித்து, வெளிநாட்டுக் கடனை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தியில் சுட்டிக்காட்டக்கப்பட்டுள்ளது.

வட்டி வீதத்தை முறையற்ற விதத்தில் மாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டுக்களால் HSBC வங்கியின் முகாமைத்துவ மட்டத்துடன் தொடர்புடைய சில அதிகாரிகள் சேவையை விட்டுச் செல்ல நேரிட்டதாகவும், சன்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த வட்டி வீத முறைக்கேடு சில வருடங்களாக இடம்பெற்றதாகவும், அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

HSBC வங்கி மீது சர்வதேச ரீதியில் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நாணய மாற்றத்தை முறையற்ற வகையில் நடைமுறைப்படுத்தியதாக தெரிவித்து அமெரிக்காவும் HSBC வங்கிக்கு எதிராக அண்மையில் விசாரணை ஒன்றை ஆரம்பித்ததாக சன்டே டைம்ஸ் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்