கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2016 | 1:15 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாப ராஜபக்ஸவிற்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு நீமவான் நீதிமன்றத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

கோட்டாப ராஜபக்ஸ சீனாவிற்கு செல்வதற்காக, கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவினால் இந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அவர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணாந்து வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரிய போதும் , இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தரணி துஷார ஜயரத்ன அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

மேஜர் ஜெனரல் செல்லவுள்ள நாடு மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய மேஜர் ஜெனரலின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்க முடியாது எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதனிடையே கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சபீர், சீனாவில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாடொன்றிற்கு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பு கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

யுத்த காலப் பகுதியின் போது அவரால் முன்னெடுக்கப்பட்ட சேவையை ஆராய்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அவருக்கு 50 இலட்சம் ரூபாவிற்கான முறிகளுக்கான கையெழுத்து பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்