ஆட்சியிலுள்ள அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்லவென அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

ஆட்சியிலுள்ள அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்லவென அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2016 | 4:59 pm

ஆட்சியிலுள்ள அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்லவென அறிவிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

பிரதம நீதியரசர் கே. ஶ்ரீபவன், சிசிர டி ஆப்ரூ மற்றும் உபாலி அபேரத்ன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டது.

அனைத்து கட்சிகளும் இணைந்து உருவாக்கும் ஒரு அரசாங்கமே தேசிய அரசாங்கம் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.

நடைமுறையிலுள்ள அரசில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் அங்கம் வகிக்கவில்லை என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் மாத்திரமே அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆயினும், தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கமாகும் என இதற்குப் பதிலளித்து ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கனகயீஸ்வரன் மற்றும் ரொமேஷ் டி சில்வா ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 143 பேர் அதனை அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறான ஒரு நிலைமையின் கீழ், இந்த விடயம் குறித்து நீதிமன்றத்தினால் வினவமுடியாதென சட்டத்தரணிகள் எடுத்துக்கூறினார்கள்.

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்