தமிழ் அரசியல் கைதிகள் 20 பேர் நான்காவது நாளாக தொடர்ந்தும் உண்ணாவிரதம்

தமிழ் அரசியல் கைதிகள் 20 பேர் நான்காவது நாளாக தொடர்ந்தும் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2016 | 7:13 pm

தமிழ் அரசியல் கைதிகள் 20 பேர் அனுராதபுரம் சிறையில் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதம் நான்காம் நாளாக இன்றும் தொடர்கின்றது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகள், சிறைச்சாலையில் உணவைத் தவிர்த்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 21 ஆம் திகதி முதல் 20 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தம் மீதான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் தமது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்ற வரம்பிற்குள் மாற்றுமாறும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயினும், இந்த கைதிகள் தொடர்பில் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதால், சிறைசாலைகள் திணைக்களத்தினால் அவர்களின் கோரிக்கை தொடர்பில் தலையிட முடியாத நிலை காணப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய நீதிமன்றத்தினால் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்