மக்கள் சக்தி திட்டம் தொடர்பில் பிரதான இரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து

மக்கள் சக்தி திட்டம் தொடர்பில் பிரதான இரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2016 | 8:28 pm

பொதுமக்களுக்கு பொருட்கள் மற்றும் உதவிகளைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, தகவல்களை வழங்குவதே பொதுசன ஊடகத்தின் கடப்பாடு என அரச தகவல் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்த கருத்தொன்றை தி ஐலன்ட் பத்திரிகை இன்று வெளியிட்டிருந்தது.

இதேவேளை, நியூஸ்பெஸ்டினால் முன்னெடுக்கப்படும் மக்கள் சக்தி திட்டம் தொடர்பில் பிரதான இரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று நடைபெற்ற கூட்டங்களில் கருத்து வெளியிட்டனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

[quote]வறுமையை ஒழிப்பதற்காக வெவ்வேறு அரசாங்கங்களால் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், நாட்டில் இன்று பெரும்பாலானவர்கள் வறுமையால் வாடுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் உண்மையைப் பேச வேண்டும். அதற்கு தீர்வு காணவும் முனைய வேண்டும். குறிப்பாக இந்த நாட்களில் சிரச ஊடகத்தினால் கிராமங்களில் நிலவும் வறுமை மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முழு இலங்கைக்கும் அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். இதனைக் கூறுவதால் ஏனைய ஊடகங்கள் வெறுப்படையக்கூடாது.[/quote]

இதேவேளை, பலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட தென் மாகாண சபை உறுப்பினர் அசோக்க தனவன்ச, மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

[quote]மக்கள் சக்தி வேலைத்திட்டத்தின் பல்வேறு விடயங்களை சிரச தொலைக்காட்சியூடாக இப்போது காண்பிக்கின்றனர். பொது மக்கள் நிதி உதவி செய்கின்றனர். அந்த உதவியினூடாக திட்டங்களை முன்னெடுக்கின்றனர். பலப்பிட்டிய தொகுதியிலும் பல கிராமங்களிலும் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. சமூக நீர் விநியோக திட்டங்கள் தடைப்பட்டுள்ளன. ஆகவே, குறுந்துகம்பியச, அரவ்வ கிராமம், யுனெஸ்கோ கிராமம் ஆகிய பகுதிகளுக்கு வந்து மக்கள் சக்தியூடாக உதவி புரியுமாறு சிரசவிடம் கோர வேண்டும் என நானும் எண்ணியுள்ளளேன்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்