சிறுமியை மூர்க்கத்தனமாய் தாக்கிய வளர்ப்புத்தாய்க்கு விளக்கமறியல்; சிறுவர்கள் பாதுகாப்பு நிலையத்தில் ஒப்படைப்பு

சிறுமியை மூர்க்கத்தனமாய் தாக்கிய வளர்ப்புத்தாய்க்கு விளக்கமறியல்; சிறுவர்கள் பாதுகாப்பு நிலையத்தில் ஒப்படைப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2016 | 8:36 pm

யாழ். நீர்வேலி பகுதியில் 6 வயது சிறுமியைக் கடுமையாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட, சிறுமியின் வளர்ப்புத்தாய் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் அவரை இன்று ஆஜர்படுத்தியதை அடுத்தே, பதில் நீதவான் கந்தையா அரியநாயகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நீர்வேலி பகுதியில் 6 வயது சிறுமியை அவரது வளர்ப்புத்தாய் மிக மூர்க்கத்தனமாக தாக்கியமை பதிவான காணொளி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

காணொளி வெளியான ஒருசில மணித்தியாலங்களில் யாழ். சிறுவர் நன்நடத்தைப் பிரிவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து, கோப்பாய் பொலிஸார் சிறுமியின் தாயாரைக் கைது செய்துள்ளனர்.

பிள்ளைகளின் தந்தை, சிரட்டையைக் கரியாக்கி விற்பனை செய்யும் நிலையில், அவரது வேலை காரணமாக வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத்தாய் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் நாயமார்கட்டு சிறுவர் பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்