எழுக தமிழ் பேரணியில் உணர்வுப்பூர்வமாக கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

எழுக தமிழ் பேரணியில் உணர்வுப்பூர்வமாக கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2016 | 6:37 pm

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை (24) நடைபெறவுள்ள ”எழுக தமிழ்” மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுப்பூர்வமாக கலந்துகொள்ளுமாறு பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

எவ்வித அரசியல் சார்பும் இன்றி தமிழ் மக்களின் நலனை மட்டும் முன்னுரிமைப்படுத்தி இந்த பேரணி நடத்தப்படுவதாக தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் எழுக தமிழ் மாபெரும் பேரணி, யாழ். முற்றுவெளி மைதானத்தை சென்றடையவுள்ளதாகவும், பேரணியில் மக்கள் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவகங்கள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வாகன திருத்துமிடங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்களை நாளைய தினம் மூடி, பேரணியின் வெற்றிக்கு ஒத்துழைக்குமாறு உரிமையுடன் வேண்டி நிற்பதாக தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கூட்டுப்பேரணி என்ற வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்ற பெயர் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கும் தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கும் எதுவித தொடர்பும் இல்லை எனவும், தமிழ் மக்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், தமிழ் மக்களின் நலன் சார்ந்து பேரவையால் முன்மொழியப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்று, அதனை ஆதரிப்பவர்கள் எவராயினும் இந்த பேரணியில் கலந்துகொள்ள முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமையை அகிம்சை வழியில் வலியுறுத்தும் எழுக தமிழ் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணி திரண்டு பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்