வசீம் தாஜூடீனின் உடற்பாகங்கள் மாலபே சைட்டம் நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது

வசீம் தாஜூடீனின் உடற்பாகங்கள் மாலபே சைட்டம் நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2016 | 7:18 pm

ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் உடற்பாகங்கள் மாலபே சைட்டம் நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திர விமலசிறி இது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதிக எண்ணிக்கையானோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டார்.

முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகரவின் கீழ் பணியாற்றிய ஊழியர்கள் மூலம், வசீம் தாஜூடீனின் உடற்பாகங்களை மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு கொண்டுசென்றதாக பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்புகள் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திர விமலசிறி நீதிமன்றத்தில் கூறினார்.

அத்துடன், இந்த தொலைபேசி உரையாடல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பதை சந்தேகமின்றி உறுதிப்படுத்துவதற்காக அனுபவமிக்க ஒருவர் ஊடாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுட்டிக்காட்டினார்.

தாஜூடீன் கொலை விவகாரம் தொடர்பான வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்