ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2016 | 12:47 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த நால்வரும் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதன்பிரகாரம், சந்தேகநபர்கள் நால்வரும் எதிர்வரும் அக்டோபர் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராஜா, கஜன் மாமா என அழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயகம் மற்றும் எம்.எல். கலீல் ஆகியோரின் விளக்கமறியலே நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்