இலங்கை யுத்தத்தின் பின்னர் காயங்களைக் குணப்படும் மார்க்கத்திற்கு சென்றுள்ளது – பான் கீ மூன்

இலங்கை யுத்தத்தின் பின்னர் காயங்களைக் குணப்படும் மார்க்கத்திற்கு சென்றுள்ளது – பான் கீ மூன்

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2016 | 8:31 pm

ஐக்கிய நாடுகளின் 71 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று ஆரம்பமானது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 130 க்கும் அதிகமான அரச தலைவர்கள் கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது இறுதி உரையில் இலங்கையையும் பாராட்டினார்.

பான் கீ மூன் தெரிவித்ததாவது,

[quote]உலகில் சக்திவாய்ந்த சில தரப்பினர் தம்மிடம் திட்டமொன்றை வைத்துக்கொண்டுள்ளனர். சிரியாவில் பொதுமக்களுக்கு எதிரான போராட்டத்திற்கு, ஏதாவது ஒருவகையில் தலையிட்டு வசதிகளை ஏற்படுத்தியவர்கள் அல்லது சிரியாவின் பிரச்சினைகளைப் பாராமுகமாக இருந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இந்த மண்டபத்தில் உள்ளனர். மியன்மாரின் நிலைமை புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. இலங்கையும் யுத்தத்தின் பின்னர் காயங்களைக் குணப்படும் மார்க்கத்திற்கு சென்றுள்ளது. இந்த இரண்டு நாடுகளிலும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டாலே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.[/quote]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பல அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவுஸ்திரேலியப் பிரதமர் மெல்கம் டர்ன்புலை சந்தித்தார்.

இலங்கையின் அபிவிருத்திக்காக அவுஸ்திரேலியா வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தலைத் தடுப்பதற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்களை அவுஸ்திரேலிய பிரதமர் இதன்போது பாராட்டியுள்ளார்.

அதன் பின்னர் ஜனாதிபதி, இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் எம்.கே. அக்பரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்திய நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ள சில திட்டங்கள் இதுவரை ஆரம்பிக்கப்படாமை தொடர்பில் இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கவலை தெரிவித்துள்ளதுடன், அந்தத் திட்டங்கள் தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்