மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில்: வெலிக்கடை சென்று சந்தித்தார் மஹிந்த

மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில்: வெலிக்கடை சென்று சந்தித்தார் மஹிந்த

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2016 | 8:28 pm

சட்டத்திற்குப் புறம்பான வகையில் சொத்துக்களை சம்பாதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு – 7, கிங்ஸ் வீதியில் வீடொன்றை வாங்கிய முறை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

சில மணித்தியால விசாரணைகளின் பின்னர், முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு நிதி தூய்தாக்கல் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு கிங்ஸ் வீதியில் 27 மில்லியன் பெறுமதியான வீடொன்றை கொள்வனவு செய்வதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது என்பதைத் தெளிவூட்ட முடியாதமையினால் மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

மேலும், 10 மில்லியன் ரூபாவை சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதித்துள்ளதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

சந்ததேகநபர் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதால் பிணை வழங்கவேண்டாம் என பொலிஸார் நீதிமன்றத்தில் கோரியிருந்ததுடன், விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான் முன்னாள் அமைச்சரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அவர் வெலிக்கடைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை வளாகத்திற்குள் சில தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க முயற்சித்தன.

மஹிந்தானந்த அளுத்கமகே வெலிக்கடைக்கு கொண்டுசெல்லப்பட்ட சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ அங்கு வருகைதந்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஸ, அரசியல் நடவடிக்கைகளே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்