கிளிநொச்சி பளை பிரதேசத்தில் விபத்து; ஐவர் பலி (Video)

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் விபத்து; ஐவர் பலி (Video)

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2016 | 8:02 am

கிளிநொச்சி பளை தர்மங்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மூன்று பெண்களும், இரண்டு ஆண்களுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர் திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது வேனில் பயணித்த எட்டு பேரில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும், வேனில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன், பஸ்ஸில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலங்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் பருத்தித்துறையை சேர்ந்தவர்கள் கொழும்பு வௌ்ளவத்தைக்கு சென்று திரும்பி செல்கையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வேனின் சாரதிக்கு தூக்க கரக்கம் ஏற்பட்டுள்ளமை மற்றும் இரண்டு வாகனங்களும் அதிக வேகத்தில் பயணித்துள்ளமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்