அர்ஜெண்டினாவில் தானாக சுற்றும் மர்மத் தீவு (Video)

அர்ஜெண்டினாவில் தானாக சுற்றும் மர்மத் தீவு (Video)

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2016 | 4:44 pm

மிதக்கக்கூடிய சின்னஞ்சிறு தீவான பரானா டெல்டா, அர்ஜெண்டினாவின் வட கிழக்கு முனையில் அமைந்துள்ளது.

வட்டமாக அமைந்துள்ள நிலப்பகுதியைச் சுற்றிலும் 130 அடி அகலத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இங்கு தண்ணீர்ப் பகுதியும் நிலப்பகுதியும் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள்.

‘ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியை 6 மாதங்களுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான செர்கியோ நெஸ்பில்லர் கண்டுபிடித்தார்.

அமானுஷ்யம், பேய், வேற்றுக்கிரக மனிதர்கள் போன்ற விஷயங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுப்பதற்காக, இடம் தேடி வரும்போது இதைக் கண்டுபிடித்துள்ளார்.

”இயற்கையாக உருவாகியுள்ள இந்த வட்டமான நிலமும் அதைச்சுற்றியுள்ள நீரும் தானாகவே சுற்றி வருகின்றன என்பதைப் பலவிதங்களில் உறுதி செய்தோம். வட்டப் பகுதியில் இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்கு நகர்ந்துவிடுகின்றன. திரைப்படத்திற்கு இடம் தேடி வந்த நான், இன்று ‘ஐ’ பகுதியை வைத்து, ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன். விரைவில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பரானா டெல்டாவுக்கு வரப் போகிறேன். ‘ஐ’ பகுதிக்கான காரணத்தைக் கண்டறிவேன். இந்த இடம் அற்புதமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது. இந்தத் தண்ணீர் பளிங்கு போலவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது,” என செர்கியோ நெஸ்பில்லர் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்பகுதி சதுப்பு நிலமாக இருக்கிறது. மேற்பகுதி நிலம் சுழல்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு ஏராளமான கேள்விகளை உருவாக்கியிருக்கிறது.

சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கும் என்கிறார்கள்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்