ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் ஹஜ் திருநாள் வாழ்த்துச் செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் ஹஜ் திருநாள் வாழ்த்துச் செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் ஹஜ் திருநாள் வாழ்த்துச் செய்திகள்

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2016 | 8:07 am

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி…

மனித நேயம், தியாகம், ஆகிய உயரிய குணாம்சங்களில் அழகுபெறும் புனித தினமாக ஹஜ் திருநாள் விளங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

சமாதானத்தினதும் சகோதரத்துவத்தினதும் எல்லைகளை விரிவுபடுத்தி முஸ்லிம் மக்கள் புனித குரானில் வரும் முஹமது நபி நாயகத்தின் வழிகாட்டலை ஏற்று பின்பற்றும் தத்தமது மத பக்திமீது பாரிய அர்ப்பணிப்பின் உச்சகட்டமே ஹஜ் வழிபாடு எனவும் ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதோர் சமூகத்தினை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள இலங்கைக்கு ஹஜ் பண்டிகை பெற்றுக் கொடுக்கும் அவகாசமானது மிகுந்த முக்கியத்துவத்தினை பெறுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சுபமான எதிர்பார்ப்புகளை முன்னிலைப்படுத்தி இன்று அனுஷ்டிக்கபபடும் புனித ஹஜ் பண்டிகையானது இலங்கை வாழ் சகல இஸ்லாமியர்களுக்கும் நல்லாசிகள் கிட்டும் ஹஜ் பண்டிகையாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் வாழ்த்துச் செய்தி…

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தியாகத்தினதும், ஐக்கியத்தினதும், நல்லிணக்கத்தினதும் உன்னதமான படிப்பினையை ஒவ்வொரு வருடமும் நினைவூட்டும் ஹஜ் நிகழ்வானது, உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களின் ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் அதன் மூலம் வெளிப்படும் ஆன்மீக ஒளியை சிறப்பாக எடுத்துக் காட்டுவதாக பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, சகவாழ்வுடன் வாழ்வதற்கும், தியாக உணர்வுடன் தம்மிடம் காணப்படும் வளங்களை ஏழை எளியவர்களுடன் பங்கிட்டுக் கொள்வதற்குமான ஹஜ் கிரியையினை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் சமயத்தின் உள்ளடக்கம், முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி அனைவருக்கும் பெறுமதியான செய்தியை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹஜ்ஜின் ஆன்மீகப் பெறுமானங்கள் அனைத்து உலக மக்களையும் மிகவும் சிறப்பானவர்களாக மாற்றுவதற்குப் பங்களிப்பு செய்யட்டும் என்ற பிரார்த்தனையுடன், அனைத்து முஸ்லிம்களுக்கும் இன்பகரமான பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

எதிர்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி…

அத்தோடு இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாட்டில் புதிய அத்தியாயத்தை நோக்கி செல்லுகின்ற இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஹஜ் பெருநாளின் தாற்பரியமான தியாகத்தினை மனதிலே கொண்டவர்களாய் நிலையான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முன்வரவேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் வாழ்த்து செய்தியூடாக அழைப்பு விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்