வாகனத்தை இடைமறித்ததாக முறைப்பாடு: இணக்கப்பாட்டிற்கு வந்த திகாம்பரம், செந்தில்

வாகனத்தை இடைமறித்ததாக முறைப்பாடு: இணக்கப்பாட்டிற்கு வந்த திகாம்பரம், செந்தில்

எழுத்தாளர் Bella Dalima

06 Sep, 2016 | 6:11 pm

2013 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பழனி திகாம்பரத்தின் வாகனம் இடைமறிக்கப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இணக்கப்பாட்டிற்கு வர இரண்டு தரப்பினரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலின்போது கொழும்பு நோக்கி பயணித்த, பழனி திகாம்பரத்தின் வாகனத்தை இடைமறித்ததாக, செந்தில் தொண்டமான் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் அமைச்சர் பழனி திகாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

பிரதிவாதிகள் சார்பில் ஊவா மாகாண அமைச்சர் உள்ளிட்ட 7 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதன்போது வழக்கில் இணக்கப்பாட்டிற்கு வர இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இன்றைய வழக்கு விசாரணை ஆரம்பமான போது நீதிமன்றில் ஆஜராகத்தவறிய எட்டாவது சந்தேகநபருக்கு பிடியாணை பிறபிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இன்றைய வழக்கு விசாரணை நிறைவடைந்ததன் பின்னர் அவர் நீதிமன்றத்திற்கு வருகைதந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு எதிர்வரும் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்