பான் கீ மூன் யாழ்ப்பாணம் விஜயம்: காணாமற்போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

பான் கீ மூன் யாழ்ப்பாணம் விஜயம்: காணாமற்போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2016 | 10:40 pm

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டார்.

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், வட மாகாண ஆளுரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விஜயத்தை முன்னிட்டு ஆளுநர் அலுவலகம் முன்பாக காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த காணாமற்போனவர்களின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ஜ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனையடுத்து, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பு இடம்பெற்ற வேளையில், யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக ஆரப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், காணாமற்போனவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள் என பெருமளவானவர்கள் கண்ணீர் மல்கக் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்திக்க வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

அதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் மக்களை சந்திக்காது திரும்பிச் சென்றனர்.

இதேவேளை, ஐ.நா. செயலாளர் நாயகம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் நிறைவாக வலி வடக்கு – தெல்லிப்பளை – வீமன்காமம் பாகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்