வலி வடக்கு முகாம் மக்களுக்கு மூன்று கடிதங்கள் விநியோகம்

வலி வடக்கு முகாம் மக்களுக்கு மூன்று கடிதங்கள் விநியோகம்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 7:34 pm

யாழ்ப்பாணம், வலி வடக்கு பகுதியில் முகாம்களிலுள்ள மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

குறித்த கடிதங்கள் மாவட்ட செயலகத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் இந்த மூன்று கடிதங்களும் விநியோகிக்கப்படுவதாக குறித்த படிவங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

01. காணி இல்லாதவர்களுக்கு வேறு இடங்களில் காணி.

02. காணி உள்ளவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துதல்.

03. இராணுவத் தேவைக்காக நிலங்களை சுவீகரிப்பது.

மேற்சொன்ன விடயங்களுக்காகவே இந்த கடிதங்கள் வலி வடக்கு பகுதியில் முகாம்களிலுள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ள கடிதங்கள் தம் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோணபுலம் முகாம் மக்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தினால் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள இந்த மூன்று விண்ணப்பப்படிவங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிந்துள்ளதா, என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பின்வருமாறு பதிலளித்தார்,

[quote]வலி வடக்கில் 25 வருடங்களாக இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள் சிறிது சிறிதாக நல்லாட்சியில் விடுவிக்கப்பட்டு வருகி்ன்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று படிவங்களில் கையொப்பமிடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் ஆட்சேபித்து என்னிடம் முறையிட்டுள்ளனர். நான் பிரதமர், பாதுகாப்பு செயலாளர், சுவாமிநாதனுடன் பேசினேன். இன்னும் விடுவிக்கப்படும் இடங்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை. மக்கள் சார்பாக 2003 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன். அதற்கு சாதகமான பதில் கிடைத்தது. திடீரென பத்திரிக்கையில் இப்படியான செய்திகள் வெளிவந்துள்ளன. அதனை நான் ஆட்சேபித்திருக்கின்றேன். அரசின் பக்கசார்பான நடவடிக்கைகளின் காரணமாக காணிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இது தொடர்பானவொரு தீர்மானம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. எங்களுக்குத் தெரியாமல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் இது தனக்குத் தெரியாது எனவும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். ஆளுநருடனும் பேசியிருக்கின்றேன். சுவாமிநாதனுடன்
பேசிய போது, எந்த இடம் தேவை என்பது பற்றி உத்தரவாதம் வழங்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக சுவாமிநாதன் தெரிவித்தார். இதுவொரு கருத்துக்கணிப்பு என ஜனாதிபதி கூறியதாக சுவாமிநாதன் கூறினார்.[/quote]

என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்