நல்லை அலங்காரக்கந்தனின் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக இடம்பெற்றது

நல்லை அலங்காரக்கந்தனின் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக இடம்பெற்றது

நல்லை அலங்காரக்கந்தனின் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2016 | 1:48 pm

உலகம் எங்கும் வாழும் இந்துக்கள் வரம் வேண்டி நிற்கும் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று இனிதே நடைபெற்றது.

நல்லைக்கந்தனின் மஹோற்சவப் பெருவிழாவினை யாழ் மண்ணின் குடும்ப விழாவாக உள்நாட்டிலும் வௌிநாட்டிலும் வாழும் சொந்தங்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அதிகாலை நடைபெற்ற விசேட பூஜைகளை அடுத்து வள்ளிநாச்சி, தெய்வானை அம்பாள் சமேதராய் சண்முகப்பெருமான் பக்தர்கள் புடைசூழ ஆலயத்தின் வெளி வீதியில் எழுந்தருளினார்.

பிராமண உத்தமர்களின் வேதமந்திர உச்சாடனமும் மங்கள வாத்தியங்களும் முழங்க பக்தர்களின் அரோஹரா கோஷம் கடலலையை விஞ்சி ஆர்ப்பரிக்க, காண்டாமணியோசை அணி செய்ய நல்லையம்பதியின் நாயகன் தேரில் ஆரோகணிக்கப்பட்டார்.

அதனை அடுத்து அகிலம் போற்றும் அலங்காரக் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தில் சிறப்பிடம் பெறுகின்ற இரதோற்சவப் பவனி ஆரம்பமானது.

பக்தியுணர்வு மேலிட பக்தர்கள் திருவடத்தை பிடித்து இழுத்தும், பறவைக்காவடி, தூக்குக்காவடி ஆகியவற்றை எடுத்தும் தீச்சட்டிகளையும் ஏந்தியும் சிதறு தேங்காய்களை உடைத்தும் தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் எம்பெருமான், பச்சை சாத்தி பக்திக் கோலத்துடன் மீண்டும் ஆலயத்திற்குள் எழுந்தருளினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்