நல்லையம்பதியின் நாயகன் தேரில் ஆரோகணிக்கப்பட்டார்

நல்லையம்பதியின் நாயகன் தேரில் ஆரோகணிக்கப்பட்டார்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 7:20 pm

உலகம் எங்கும் வாழும் சைவ மக்கள் வரம் வேண்டி நிற்கும், பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று இனிதே நடைபெற்றது.

யாழ். மண்ணின் தொன்மைவாய்ந்த கலாசாரப் பாரம்பரியங்களின் கேந்திர நிலையமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் விளங்குகின்றது.

அதிகாலை நடைபெற்ற விசேட பூஜைகளை அடுத்து வள்ளி நாச்சி, தெய்வானை அம்பாள் சமேதராய் சண்முகப்பெருமான் பக்தர்கள் புடைசூழ ஆலயத்தின் வெளி வீதியில் எழுந்தருளினார்.

பிராமண உத்தமர்களின் வேதமந்திர உச்சாடனமும் மங்கள வாத்தியங்களும் முழங்க பக்தர்களின் அரோஹரா கோஷம் கடலலையை விஞ்சி ஆர்ப்பரிக்க, காண்டாமணியோசை அணி செய்ய நல்லையம்பதியின் நாயகன் தேரில் ஆரோகணிக்கப்பட்டார்.

அதனை அடுத்து அகிலம் போற்றும் அலங்காரக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் சிறப்பிடம் பெறுகின்ற இரதோற்சவப் பவனி ஆரம்பமானது.

நல்லையம்பதியில் திரண்டிருந்த பக்தர்கள் பக்திப் பிரவாகத்தில் திளைக்க நல்லுாரின் நாயகன் கம்பீரமாக வெளிவீதி வலம் வந்தார்.

பக்தியுணர்வு மேலிட அரோஹரா கோஷம் எழுப்பி பக்தர்கள் திருவடத்தைப் பிடித்து இழுத்தும், பறவைக்காவடி, தூக்குக்காவடி ஆகியவற்றை எடுத்தும் தீச்சட்டிகளை ஏந்தியும் சிதறு தேங்காய்களை உடைத்தும் தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் எம்பெருமான், பச்சை சாத்தி பக்திக் கோலத்துடன் மீண்டும் ஆலயத்திற்குள் எழுந்தருளினார்.

கண்டம் கடந்து சர்வதேச நாடுகளில் வாழும் தாயக மக்கள், சொந்த மண் திரும்பி குடும்ப விழாவாகக் கொண்டாடும் நல்லைக் கந்தனின் மகோற்சவப் பெருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் இன்றைய தினம் கலந்துகொண்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்