பரவிபாஞ்சானில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த ஒரு பகுதி காணி நாளை விடுவிப்பு

பரவிபாஞ்சானில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த ஒரு பகுதி காணி நாளை விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2016 | 10:04 pm

கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் காணியில் ஒருபகுதி நாளை விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த பொதுமக்களின் காணியில் சுமார் மூன்றரை ஏக்கர் அளவிலான காணியை நாளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் அலுவலகத் தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பரவிபாஞ்சான் பகுதியில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இதனையடுத்து, கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக தொடர்புகொண்டதை அடுத்து, இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.

இதனையடுத்து, ஐந்து நாட்களாக தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள், தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதியளித்தவாறு 14 நாட்கள் கால வரையறை நாளையுடன் நிறைவடையும் நிலையில், பரவிபாஞ்சானில் சுமார் மூன்றரை ஏக்கர் காணி நாளை விடுவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டுவந்த காணியில் சுமார் நான்கு ஏக்கர் காணி ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்