காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுப்பு

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுப்பு

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2016 | 8:11 pm

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க நாடளாவிய ரீதியில் இன்று போராட்டங்களை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமான பேரணி யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் நிறைவு பெற்றது.

பொதுமக்களின் கையெழுத்துக்களும் இங்கு பெறப்பட்டதுடன் பேரணியின் இறுதியில் மகஜரும் கையளிக்கப்பட்டது.

சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்தோர், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், படுகொலைக்கும் வன்முறைக்கும் உள்ளானோரின் குடும்ப அமைப்பினர் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்ற கவன ஈர்ப்புப் போராட்டத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் போனோர் தொடர்பில் செயற்படும் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியிடம் காணமற்போனவர்களின் உறவினர்கள் மகஜரையும் கையளித்தனர்.

சர்வதேச காணாமற்போனோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட காணாமற்போனவர்களின் உறவுகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தொண்டு நிறுவனங்களின் இணையத்தினர் இணைந்து கவன ஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது மக்கள் கண்ணீர் மல்க தமது தொலைந்த உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.

திருகோணமலையிலும் சர்வதேச காணாமற்போனோர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருமளவிலான மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகக்கூடிய காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க தமது உறவுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டனர்.

காணாமல் போனோருக்கான செயலகம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைய வேண்டும் எனவும் இதன் போது காணாமற்போனோரின் உறவுகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

மன்னாரில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று அமைதிப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டம் உருப்பெற்றது.

காணாமற்போன, கடத்தப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு மக்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மதகுருமார்களும் கலந்து கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்