இன்று சர்வதேச காணாமற்போனோர் தினம்

இன்று சர்வதேச காணாமற்போனோர் தினம்

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2016 | 5:33 pm

தமது உறவுகள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற ஏக்கத்துடன் ஏராளமானோர் இன்று வரை காத்திருக்கின்றனர்.

தம் கண் முன்னே கடத்திச்செல்லப்பட்ட உறவுகள் இன்னும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதிகமானோர் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

அவ்வாறான சூழ்நிலையிலேயே இலங்கையிலும் இன்று சர்வதேச காணாமற்போனோர் தினம் நினைவுகூரப்படுகின்றது.

அடையாளம் தெரியாத இடங்களில் தடுத்து வைத்தல், உறவினர்களுக்கு அறிவிக்காமல் அல்லது பல்வேறு சட்டங்களின் படி கைது செய்யப்பட்டு பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக சர்வதேச காணாமற்போனோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு கொஸ்டெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட, கைது செய்யப்பட்டு பின்னர் காணாமற்போனவர்களின் உறவினர்கள் அமைப்பினால் காணாமற்போனோர் தினம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

காணாமற்போன மக்களின் பாதுகாப்பிற்கான கொள்கைப் பிரகடனம் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டது.

காணாமற்போனோர் தொடர்பிலான சர்வதேச தினத்தை முன்னிட்டு இன்று இலங்கையிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காணாமற்போனோரின் உறவினர்கள் மற்றும் சுதந்திர மேடை, வீதியின் எதிர்ப்பு அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த பேரணி, கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமானது.

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகத்தை வரவேற்போம் எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் விஹாரமாதேவி பூங்காவிலிருந்து லிப்டன் சுற்றுவட்டம் வரை பேரணியாகச் சென்று காணாமற்போனோரின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்