வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் த.தே.கூ கண்டனம்

வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் த.தே.கூ கண்டனம்

வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் த.தே.கூ கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2016 | 11:07 am

வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்றங்களை கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழு, பிரதமரை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் தீய நோக்கங்களையும், இன ரீதியான பதற்றங்களையும் உருவாக்கும் நோக்கில் இடம்பெறும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதன்போது சுட்டிக்காட்டியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களுக்கான தகுதிபெற்றிருந்தும் அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படாமை குறித்தும் இதன்போது பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

மேலும், சிங்கள மக்கள் வடக்கிலே மீளக்குடியேறுவதையும் அங்கே தமது மதத்தினையும் கலாச்சாரத்தினையும் பின்பற்றுவதை வரவேற்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இனரீதியான பதற்றத்தை தூண்டும் விதத்திலும், வடக்கு கிழக்கிலே சனத்தொகை பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினால் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் குந்தகத்தை ஏற்படுத்தும் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நேற்றைய சந்திப்பின் போது பிரதமர் உறுதியளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்