யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற அரசியல் கைதி தொடர்பில் விசாரணை

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற அரசியல் கைதி தொடர்பில் விசாரணை

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற அரசியல் கைதி தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2016 | 1:55 pm

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரசியல் கைதி ஒருவர் தப்பிச் சென்றமை தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சந்தேகநபர் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பூரண கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் நலக்குறைவினால் கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடமையிலிருந்த சிறைச்சாலை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.தென்மராட்சியை சேர்ந்த இராசையா ஆனந்தராஜா எனும் 37 வயதானவரே யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த நபர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் 2012ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஆனந்தராஜா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, கடந்த ஜூன் 5 ஆம் திகதி தனது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன் பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, குறித்த கைதியை அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்குமாறு சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்ற புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு பணிப்புரை விடுத்தது.

இதனையடுத்து கடந்த 14 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குறித்த கைதிக்கு, தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், சிறைச்சாலை அதிகாரிகளால் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கைதி தப்பியோடியதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகைளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்