தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பலதரப்பு பேச்சுவார்த்தைகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பலதரப்பு பேச்சுவார்த்தைகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பலதரப்பு பேச்சுவார்த்தைகள்

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2016 | 1:48 pm

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பலதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிறு குற்றங்கள் புரிந்தமை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் கலந்துரையாடலின் போது அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு, சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சு, சட்ட மாஅதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞான ஜோதி தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளித்தலுக்கு உட்படுத்துதல் அல்லது வழக்கு தாக்கல் செய்யாத சந்தேகநபர்களை விடுதலை செய்தல் என்பன தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் அளவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், விடுதலை செய்யப்படகூடியவர்களின் பெயர்பட்டியலை விரைவில் தயார் செய்து சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் தற்போது காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பில் அந்த சட்டத்தின் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறித்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் எவ்வித குற்றப்பத்திரிக்கைகளும் தாக்கல் செய்யாமல் நீண்டகாலமாக தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் நிலை கவலைக்குரியது என சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து அவர்களின் விடுதலை தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், புனர்வாழ்வுபெற விரும்புவோர் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு இந்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்