வனாந்தரங்களாகக் காணப்படும் வயல் காணிகள்: ஜீவனோபாய மார்க்கங்களின்றி திரியாய் மக்கள்

வனாந்தரங்களாகக் காணப்படும் வயல் காணிகள்: ஜீவனோபாய மார்க்கங்களின்றி திரியாய் மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2016 | 9:49 pm

நாட்டில் போர் மேகங்கள் கலைந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும், அதன் உக்கிரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறிய திரியாய் மக்கள் மீள்குடியேறிய போதிலும் ஜீவனோபாய மார்க்கங்களின்றி இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

யுத்தம் காரணமாக 1985 ஆம் ஆண்டு தமது சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய திருகோணமலை – திரியாய் பிரதேச மக்கள் 2005 ஆம் ஆண்டின் பின்னர் படிப்படியாக தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேறி வருகின்றனர்.

வன்னியில் உள்ள முகாம்களில் அகதிகளாகத் தம் வாழ்க்கையைக் கடத்தி வந்த மக்கள் பல கனவுகளுடன் தம் பூர்வீக நிலங்களில் மீளக்குடியேறிய போதிலும், விவசாயத்தை நம்பி வாழ்வை செழிப்பாக்க நினைத்தவர்கள் இன்று வாழ்வாதாரமின்றி வெற்றுப் பெருமூச்செறிகின்றனர்.

இந்நிலையில், திரியாய் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வயல் காணிகள் வனாந்தரங்களாகக் காட்சியளிப்பதுடன் விவசாயத்திற்காய் நிர்மாணிக்கப்பட்ட சிறு குளங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விவசாயத்தையே தம் பிரதான ஜீவனோபாய மார்க்கமாய்க் கொண்டிருந்த திரியாய் மக்கள் இன்று எதிர்பார்ப்புக்கள் பொய்த்துப் போனவர்களாய் வேதனையுடன் காலத்தைக் கடத்தி வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்