தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக: ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம்

தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக: ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2016 | 8:19 pm

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணைந்த விஞ்ஞான பீட மாணவர்கள் சிலர் தங்களின் பெற்றோர்களுடன் சென்று வட மாகாண முதலமைச்சரை இன்று முற்பகல் அவருடைய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்வதற்கு விருப்பமின்றியுள்ளதாக பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில், மாணவர்களின் நலன்கருதி, அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தங்களின் கடமை என சி.வி விக்னேஸ்வரனால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 22 ஆம் திகதி இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐந்து பேர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் முதலாம் தர மாணவர்கள் மற்றும் இரண்டாம் வருட மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல்களில் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, மாணவர்களால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்