கெம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

கெம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

கெம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2016 | 1:18 pm

பாதுகாப்பு கருதியே தமது பிள்ளைகளை இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு அழைத்துச் சென்றதாக கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த தமிழ் இளைஞர்களில் சகோதரர்கள் இருவரது தந்தை ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

கிழக்கு சசெக்ஸ் பிராந்தியத்திலுள்ள கடற்கரைக்கு பொழுதைக் கழிப்பதற்காக சென்றிருந்த பிரித்தானிய வாழ் இலங்கையைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

கடந்த புதன்கிழமை அந்த கடற்கரைக்கு சென்ற கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஶ்ரீதவராஜா ஆகியோர் கடற்கரை மணலில் சிக்கி உயிரிழந்தனர்.

இவர்களில் கெனூஜன் சத்தியநாதன் மற்றும் கோபிகாந்தன் சத்தியநாதன் ஆகிய சகோதர்களின் தந்தை உயிர்பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கவனயீனம் குறித்து சீற்றம் வெளியிட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டிருந்தால், குறைந்தபட்சம் தனது பிள்ளைகளை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு கிட்டியிருக்கும் எனவும் தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவில் இன்று சனிக்கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் கெம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த பகுதிக்கு வருகின்றவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கும் உயிர்ப்பாதுகாப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என ரொத்தர் மாவட்ட கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கெம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் போதிய உயிர்ப்பாதுகாப்பு பணியாளர்கள் இல்லையென உயிரிழந்த தமிழ் இளைஞர்களின் குடும்பத்தவர்கள் விமர்சித்துள்ளனர்.

கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த ஐவரில் நால்வர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

மற்றைய இளைஞன் லண்டனில் பிறந்த இலங்கை வம்சாவழியைக் கொண்டவர் என்றும் பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த ஐந்து தமிழ் இளைஞர்களின் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினத்திற்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய ஆலோசகர் கந்தசாமி யோகநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதவிர இறுதிச் சடங்குகளை லண்டனில் நடத்துவதற்கு அங்குள்ள உறவினர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்