இரண்டு பிரதமர்கள் செய்ய மறந்ததைச் செய்யும் மக்கள் சக்தி: 60 வருடங்களாக வௌ்ளத்தில் மூழ்கும் வீதி புனரமைப்பு

இரண்டு பிரதமர்கள் செய்ய மறந்ததைச் செய்யும் மக்கள் சக்தி: 60 வருடங்களாக வௌ்ளத்தில் மூழ்கும் வீதி புனரமைப்பு

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2016 | 8:54 pm

இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கம்பஹா – மீரிகமவை அண்மித்த களுகல – நாவிமன வீதி 60 வருடங்களுக்கும் அதிகக் காலமாக மழை பெய்யும் போது வௌ்ளத்தில் மூழ்குகின்றது.

மழையற்ற காலங்களில் இந்த வீதி முழுவதும் தூசியே காணப்படும்.

இந்த வீதியூடாக மீரிகமவுக்குப் பயணிப்பது போதலேகம, இஹலகம, கொட்டேகந்த, கடுகிதுல மற்றும் நாவிமன ஆகிய கிராமங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் கசப்பான அனுபவமாகும்.

இந்த பகுதியை வளப்படுத்துவதற்கு இரண்டு பிரதமர்களும் மறந்த போதிலும், மக்களின் வேதனையைக்கண்ட நியூஸ்பெஸ்ட்டின் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டக்குழுவினர், இந்த வீதியின் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தைப் புனரமைப்பதற்கான நடவடிக்கையை இன்று ஆரம்பித்தனர்.

இதேவேளை, 25 வருடங்களுக்கு முன்னர் பாரிய வௌ்ளத்தினால் உஸ்ஸான சப்பாத்து பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

பாலத்தின் சில கொங்ரீட் மதில்கள் மாத்திரமே எஞ்சியிருக்கும் நிலையில், இந்த கிராம மக்கள் தமது காலணிகளை கையில் ஏந்திய வண்ணமே ஹெல்ல ஓயாவை கடந்து செல்கின்றனர்.

இதன்போது உயிர் இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

விவசாயிகளின் அறுவடைகளையும் அக்கறைக்குக் கொண்டு செல்ல முடியாது வீண்விரயமான பல சந்தர்ப்பங்களும் உள்ளன.

அதிவேக வீதிகளை அமைத்து இலங்கையை உலகத்துடன் இணைப்பதற்கு திட்டமிடும் இந்த யுகத்தில், சப்பாத்து பாலமொன்றிற்காக கோரிக்கை விடுத்த களுகல கிராம மக்களின் எதிர்பார்ப்பை மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் ஊடாகவே இன்று நிறைவேற்ற முடிந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்