ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் மூலம் 10,200 மில்லியன் ரூபா நட்டம்: கோப் அறிக்கை

ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் மூலம் 10,200 மில்லியன் ரூபா நட்டம்: கோப் அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2016 | 9:24 pm

ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் மூலம் நாட்டிற்கு 10,200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு எரிபொருளின் விலை அதிகரித்தமையினால், ஒப்பந்த விலையில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சில வங்கிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டது.

ஹெஜிங் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறையின் ஊடாக எரிபொருளின் விலை ஒரு குறிப்பிட்ட தொகையை விட அதிகரிக்கும் போது, சந்தை விலைக்கும் ஹெஜிங் விலைக்கும் இடைப்பட்ட தொகையை வங்கி அரசாங்கத்திற்கு வழங்கும்.

விலை குறையும் பட்சத்தில் ஹெஜிங் விலைக்கும் சந்தை விலைக்கும் இடைப்பட்ட தொகையை அரசாங்கம் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

எனினும், இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு குறுகிய காலத்திற்குள் உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகளவில் குறைவடைந்தது.

இந்த பின்புலத்தில் ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் மூலம் நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்து அவ்வேளையில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இந்த உடன்படிக்கையை உடனடியாக இரத்து செய்யுமாறு உத்தரவிட்டது.

உடன்படிக்கையை இரத்து செய்து அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தினால் ஒரு லீற்றர் பெற்றோலை 100 ரூபாவுக்கு வழங்குமாறு நீதிமன்றம் குறிப்பிட்டது.

எனினும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவ்வேளையில் இருந்த நிறைவேற்றதிகாரம் பொருட்படுத்தவில்லை.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாது மத்திய வங்கியின் ஆளுனர் ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் தொடர்பான கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கு உத்தரவிட்டார்.

அதன் பிரதிபலனாக பல வங்கிகள் சர்வதேச முறிகள் சபையை நாடின.

நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாது செயற்பட்டமையினால் நாட்டிற்கு 10,200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்ட செலவு மற்றும் ஏனைய செலவுகளைக் கருத்திற்கொள்ளும் போது 15,000 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டி ஏற்படும் என கோப் குழு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம் இது தொடர்பில் முன்னெடுக்கும் கொள்கையை கோப் குழு விமர்சித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்