லசந்த கொலை வழக்கு: 41 இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் கடன் விபரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

லசந்த கொலை வழக்கு: 41 இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் கடன் விபரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

லசந்த கொலை வழக்கு: 41 இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் கடன் விபரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2016 | 4:42 pm

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 41 பேரின் கடன் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கல்கிசை நீதவான் இன்று கடன் தகவல் பணியகத்தின் தலைவருக்கு கட்டளை பிறப்பித்தார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளை ஆராய்ந்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதேவேளை, லசந்த விக்ரமதுங்கவின் கொலையை நேரில் கண்ட சாட்சியாளர், அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தும் அளவிற்கு உகந்த தேகாரோக்கியத்துடன் இல்லையென சட்ட வைத்திய அதிகாரியினால் இன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, அடையாள அணிவகுப்பை இரத்து செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

லசந்தவின் கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மிருக வேட்டைக்காகப் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அந்தத் துப்பாக்கி இராணுவத்தினரால் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை, லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜனை, ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் வழக்கின் கம்பஹா நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் கல்கிசை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளை செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை கல்கிசை மேலதிக நீதவான் மொஹமட் சகாப்தீன் ஒத்திவைத்ததுடன், சந்தேகநபரை அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்