வத்தேகெதர சணச சங்கத்தின் கணக்காய்வு தொடர்பில் மேல் மாகாண கூட்டுறவுத் திணைக்களம் பாராமுகம்

வத்தேகெதர சணச சங்கத்தின் கணக்காய்வு தொடர்பில் மேல் மாகாண கூட்டுறவுத் திணைக்களம் பாராமுகம்

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2016 | 10:07 pm

மாகாண சபை முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த சபைகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மாகாண சிறுபிள்ளைகள் என்ற புனைப்பெயரும் சூட்டப்பட்டிருந்தது.

மேல் மாகாண சபையின் ஒன்றுகூடல் அறையொன்றினுள் நேற்றைய (23) கூட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து, அன்று சூட்டப்பட்ட புனைப்பெயர் இன்றைக்கும் பொருந்தும் என்பது தெளிவாகப் புலனாகியது.

தமது மாகாணத்திற்குள் அமுலிலுள்ள கூட்டுறவு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள மஹரகம, வத்தேகெதர சணச நிலையத்தில் இடம்பெற்றுள்ள பாரிய நிதிமோசடி தொடர்பில், எதுவுமே அறிந்திராத சிறுபிள்ளைத் தனத்துடன் முதலமைச்சர் உள்ளிட்ட விடயத்திற்குப் பொறுப்பான முன்னாள் மாகாண கூட்டுறவு அமைச்சர் ஆகியோர் நடந்துகொண்டனர்.

சம்பந்தப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் அல்லாத 500க்கும் அதிகமானோரின் மீளப் பெறமுடியாத வைப்பீட்டுத் தொகை 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

சங்கத்தின் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் கணனி தரவுகள் அனைத்தும் காணாமற்போயுள்ளதால், வைப்பீடு செய்துள்ள வெளி வாடிக்கையாளர்கள் மற்றும் அங்கத்தவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மோசடிகளின் அளவை மதிப்பீடு செய்துகொள்வது அந்தளவிற்கு இலகுவான காரியமல்ல.

இந்த நிதி மோசடிக்கு பொறுப்புக்கூற வேண்டிய பணிப்பாளர் சபையினருடன் முதலமைச்சருக்கு நெருக்கம் காணப்படுவதை அவருடைய கருத்துக்கள் மூலமே உறுதிசெய்து கொள்ளமுடியும்.

ஆயினும், இந்த மக்களை நேற்று சந்திப்பதற்கு முன்னதாக முதலமைச்சர் வத்தேகெதர சணச நிலைய நிதி மோசடிக்காரர்கள் சார்பாகவா, தனிப்பட்ட ரீதியில் நடந்துகொண்டார் என்ற வினா எழுகின்றது.

மாகாண சபையில் நேற்றைய நிகழ்ச்சி நிரலை இடைநிறுத்தி, சர்ச்சைக்குரிய பிரேரணை தொடர்பான விவாதத்திற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனுமதி கிடைத்ததாகக் கூறி, முதலமைச்சர் தமது அதிகாரத்தைக் காண்பித்ததால் இந்த விடயம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக மாகாண கூட்டுறவு திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் ஊடாக மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய மோசடி தொடர்பில் மாகாண சபைக்குள் விவாதிப்பதற்கு இடமில்லை என்ற துர் எண்ணம் நேற்றைய தினம் வெற்றிபெற்றமையானது இத்தகைய சர்ச்சைகளுக்கு நீதி மற்றும் நியாயம் கிடைக்கமாட்டாது என்பதற்கான ஒரு சமிக்ஞையாகும்.

பத்து வருடங்களாக வத்தேகெதர சணச நிலையத்தை கணக்காய்வுக்கு உட்படுத்தும் பொறுப்பை தட்டிக்கழித்த மேல் மாகாண கூட்டுறவு திணைக்களம் நிதி மோசடிக்காரர்களுக்குப் பதிலாக முழுமையான அதிகாரம் கொண்ட விசாரணைக் குழுவின் ஊடாக மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தொடர்பான விபரங்களை நாட்டிற்கு பகிரங்கப்படுத்துவது அவசியமல்லவா?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்