வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 32,107 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 32,107 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 32,107 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசம்

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2016 | 1:39 pm

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 32,107 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 7,022 ஏக்கர் காணி தனியாருக்கு சொந்தமானவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

இவற்றில் 460 ஏக்கர் காணியை இந்த வருடத்திற்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த வருடத்திற்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 2,758 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கத்தினால் விடுவிக்கப்படும் காணிகள் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்படுவதுடன், பிரதேச செயலகங்களூடாக காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளின் அளவை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கூறியுள்ளார்.

சில இராணுவ முகாம்கள் தொடர்ந்தும் அந்த பகுதியிலேயே இயங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு வேறு காணிகள் வழங்குவதற்கு அல்லது நட்டஈடு வழங்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து நடவடிக்கைகளும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்கில் யுத்த காலப்பகுதியில் முப்படையினர் வசமிருந்த 50,000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்