பம்பலப்பிட்டியில் வர்த்தகர் கடத்தல்: ஏழு குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன

பம்பலப்பிட்டியில் வர்த்தகர் கடத்தல்: ஏழு குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2016 | 7:23 pm

பம்பலப்பிட்டிய பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரின் தலைமையில் ஏழு குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

நேற்று முன்தினம் (22) இரவு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஷகீப் சுலைமான், தனது தந்தையுடன் இணைந்து இந்தோனேஷியா மற்றும் சீனாவில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகரின் தந்தை தெரிவித்ததாவது,

கைக்கடிகாரம் ஒரு புறமாக வீசப்பட்டிருந்தது. அதில் சிறு துளி இரத்தம் காணப்பட்டது. அவர் எவருடனும் கோபத்துடன் இருக்கவில்லை. தவறான விடயங்களிலும் ஈடுபடுவதில்லை. அவர் அப்பாவிப் பிள்ளை. எவருடனும் அவருக்கு பகை இல்லை. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எவரேனும் கடத்தியிருந்தால் எனது தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு நான் வேண்டுகோள் விடுகின்றேன். நான் இரகசியமாக தேவையான பணத்தை வழங்குகின்றேன். சட்ட ரீதியாக நாம் எதனையும் செய்யப்போவதில்லை. எமக்கு எமது பிள்ளை மாத்திரம் போதும்.

எவ்வாறாயினும், நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் சில வர்த்தகர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்