முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பில் சி.வி. விக்னேஸ்வரனுக்கு மனோ கணேசன் மின்னஞ்சல்

முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பில் சி.வி. விக்னேஸ்வரனுக்கு மனோ கணேசன் மின்னஞ்சல்

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2016 | 9:18 pm

முன்னாள் போராளிகளை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பரஸ்பர கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க விமானப்படையும் இலங்கை விமானப்படையும் இணைந்து நடத்தும் ஆசிய பசுபிக் நடவடிக்கை மருத்துவ முகாம் இன்று புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் நடைபெற்றது.

நாளைய தினமும் இந்த மருத்துவ முகாம் புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில் கண், உடற்கூற்றுப் பரிசோதனை, பொது மருத்துவம், பல், மற்றும் குடும்ப நல மருத்துவம் ஆகியன முன்னெடுக்கப்பட்டன.

அமெரிக்க மருத்துவ முகாமில் பரிசோதனை மேற்கொள்வற்கான பதிவுகளுக்காக வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு இன்றும் சில முன்னாள் போராளிகள் சென்றிருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பில் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டதாகவும் அதனால் பலர் சந்தேகத்திற்கிடமான முறையில் இதுவரையில் மரணமடைந்துள்ளதாகவும் கூறி வட மாகாண சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, இது ஒரு மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு சுமார் 105 பேர் மரணமடைந்துள்ளதாகவும் ஒரு தகவலில் கூறப்பட்டது. இதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழுவிலும் ஒரு முன்னாள் போராளியால் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட மாகாண சபையின் அமைச்சர் திரு. டெனிஸ்வரன் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருவதை தாம் கவனத்திற்குக் கொண்டு வருவதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இதுபற்றி தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க தாம் முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பில் மேலும் தகவல்களை, வட மாகாண சுகாதார அமைச்சின் மூலமாகப் பெற்றுத் தருமாறும் அவர் கோரியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்