பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமாகிறது

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமாகிறது

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமாகிறது

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2016 | 12:33 pm

நடிகர்-நடிகைகள் வாழ்க்கையை படமாக்குவதில் திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை அவர் வேடத்தில் வித்யாபாலன் நடிக்க ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக்கி வெளியிட்டனர். இந்த படம் வெற்றிகரமாக ஓடி வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது.

ரஜினிகாந்தின் வாழ்க்கையை படமாக்கப்போவதாக அவரது மகள்ச சௌந்தர்யா அறிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கையும் படமாகி வருகிறது. இதுபோல் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையையும் மகாநதி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் நாக் அஸ்வின் ஈடுபட்டுள்ளார்.

சாவித்திரி 1950 மற்றும் அறுபதுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 300 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

தமிழில் நடித்த களத்தூர் கண்ணம்மா, திருவிளையாடல், கந்தன் கருணை, பாசமலர், பரிசு, பாவமன்னிப்பு, கைகொடுத்த தெய்வம், படித்தால் மட்டும் போதுமா, நவராத்திரி, மிஸ்சியம்மா உள்ளிட்ட பல படங்கள் சாவித்திரிக்கு பெயர் வாங்கி கொடுத்தன. கதாநாயகிகளில் முதன் முதலில் கார் வாங்கி வீட்டில் நீச்சல் குளம் கட்டியவர் சாவித்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

1935- இல் ஆந்திராவில் பிறந்த இவர் 1981 இல் தனது 46 ஆவது வயதில் மரணம் அடைந்தார். கதாநாயகியாக இருந்தபோது செல்வ செழிப்பில் வாழ்ந்த அவர் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்து கடைசி காலத்தில் வறுமையில் சிக்கி கஷ்டப்பட்டு இறந்தார். இந்த நிகழ்வுகளையெல்லாம் காட்சிப்படுத்தி சாவித்திரி வாழ்க்கை கதை படமாகிறது.

இதில் சாவித்திரி வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்தது. நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், வித்யாபாலன் உட்பட பலர் பரிசீலிக்கப்பட்டனர்.

இறுதியாக நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் சாவித்திரிக்கு இணையான உயரத்தில் இருப்பதாலும், முக தோற்றம் பொருந்தி இருப்பதாலும் நித்யா மேனனை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

நித்யா மேனனும் சாவித்திரி வேடத்தில் நடிக்க மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்